மானிய விலையில் தையல் எந்திரம் வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் மோசடி பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

மானிய விலையில் தையல் எந்திரம் மற்றும இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;

Update: 2019-05-26 23:00 GMT

சிவகங்கை,

கரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி தீபாம்பிகை (வயது 39). இவரிடம் காரைக்குடியை சேர்ந்த ராதிகா, சுந்தரம், ஜோதிபாண்டீஸ்வரன் ஆகியோர் தனியார் அறக்கட்டளை மூலம் தையல் பயிற்சி கற்று தருவதாகவும் பயிற்சி முடித்தவுடன், மானிய விலையில் தையல் எந்திரம் வேண்டும் என்றால் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் வாங்கி தருவதாகவும் கூறினராம்.

இதுபோல மானிய விலையில் இருசக்கர வாகனமும் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.இதை நம்பிய தீபாம்பிகை உள்பட ஏராளமானவர்கள் கடந்த பிப்வரி மாதம் இவர்களிடம் ரூ.24 லட்சத்து 22 ஆயிரத்து 400 கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்ற கொண்ட 3 பேரும் தையல் எந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை வாங்கி தரவில்லையாம்.

ஆனால் தொடர்ந்து தீபாம்பிகை மற்றும் பணம் கொடுத்தவர்கள் தையல் எந்திரம், இருசக்கர வாகனத்தை வாங்கி தருமாறும், இல்லையென்றால் பணத்தை திரும்பி தரக் கேட்டனராம். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக கூறியதை தொடர்ந்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதும், 3 பேரும் பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்–இன்ஸ்பெக்டர் புனிதன் ஆகியோர் விசாரணை நடத்தி ராதிகா மற்றும் சுந்தரம், ஜோதிபாண்டீஸ்வரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்