மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை

பூதப்பாண்டி அருகே மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-26 23:15 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே துவரங்காடு புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவருடைய மனைவி சரோஜா(வயது 60). இவர்களுடைய மகன் ராஜேஷ்குமார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா ஜான்சி(30). தங்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் சரோஜா, தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். சரோஜாவுக்கும், மருமகள் பிரபா ஜான்சிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜேஷ்குமார், தனது தாயாரை வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் வசிக்க கூறியதாக கூறப்படுகிறது. இதில் விருப்பம் இல்லாமல் சரோஜா இருந்து வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் சரோஜா இருந்து வந்தார்.

தீக்குளித்தார்...

இந்தநிலையில் நேற்று காலை சரோஜா வீட்டின் படுக்கை அறையில் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் சரோஜா உடல் முழுவதும் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரோஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்