சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி
சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை,
நெல்லை மாவட்டம் சுரண்டை காந்தி பஜார் பகுதியை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் மனைவி அழகுரமா (வயது 39). இவர் கடந்த 2012-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சங்கரசுப்பிரமணியன் தந்தை பிரம்மநாயகம் கொலை வழக்கில் அழகுரமா ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அழகுரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுரண்டை அருகே உள்ள அழகாபுரிபட்டினத்தை சேர்ந்த குமாரி (30) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் வரை வாங்கியுள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் (28) என்பவரிடம், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பேரம் பேசி, ரூ.1½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வெகு நாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக் காமல், பணத்தை திருப்பி தராமலும் அழகுரமா ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசில் குமாரி, இசக்கிராஜ் ஆகிய இருவரும் தனித்தனியே புகார் செய்தனர்.
போலீசார் விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன் நேற்று காலை அழகுரமாவை கைது செய்தார். ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார். அழகுரமா இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.