தட்டார்மடம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
தட்டார்மடம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
தட்டார்மடம்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணபாலன். இவருடைய மனைவி தங்கபுஷ்பம் (வயது 63). இவர் தினமும் அதிகாலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் அவர் நேற்று காலையில் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொள்ள வீட்டுக்கு வெளியே வந்தார். பின்னர் அவர் படுக்கப்பத்தில் இருந்து காந்தி நகர் செல்லும் வழியில் சாலையோரமாக நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் பின்னால் மர்ம நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார்.
தங்கபுஷ்பம் நடைபயிற்சி சென்றுவிட்டு திரும்பி அதே சாலையில் வந்தார். அப்போது அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளை தூரமாக நிறுத்திவிட்டு, தங்கபுஷ்பம் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். பின்னர் தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கபுஷ்பம் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.