வந்தவாசி அருகே தீயில் கருகி கணவன் - மனைவி சாவு அடுப்பு தீயை சரியாக அணைக்காததால் விபரீதம்
வந்தவாசி அருகே தீயில் கருகி கணவன் - மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். சமையல் செய்தபின் அடுப்பில் எரிந்த தீயை சரியாக அணைக்காததால் இந்த விபரீதம் ஏற்பட்டது.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள காவேடு கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு (வயது 93). இவரது மனைவி அலமேலு (90). இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் தவிர மற்ற அனைவரும் கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக கணவன் - மனைவி இருவரும் கீழ்கொடுங்காலூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள காரிய மண்டப பகுதியில் துணி கூரையால் ஆன வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கணவன் - மனைவி இருவரும் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் இரவு அலமேலு சமையல் செய்துவிட்டு அடுப்பில் எரிந்த நெருப்பை அணைக்காததால் வீட்டில் தீப்பிடித்து கணவன் - மனைவி இருவரும் தீயில் கருகி இறந்ததும், மேலும் அலமேலுக்கு சரியாக கண் பார்வை தெரியாததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.