போதை ஸ்டாம்பு விற்பனை; வாலிபர் கைது

புதுவையில் போதை ஸ்டாம்பு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-25 23:15 GMT
புதுச்சேரி,

சுற்றுலா நகரமான புதுவைக்கு நாள்தோறும் வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மது உள்ளிட்ட போதை பிரியர்களாகவே உள்ளனர்.

மேலும் சமீப காலமாக சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழக பகுதிகளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு வருவதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுவித போதைப்போருள் ஒன்று வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் படித்தவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் எல்.எஸ்.டி. ஸ்டாம்பு என்ற போதைப்பொருள்தான் அது.

அதாவது ‘லைசெர்ஜிக் டைஎத்திலமைடு’ என்ற வேதிப்பொருளைத்தான் அதிக போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த வேதிப்பொருளை கரைத்து சிறிய ஸ்டாம்புகளில் ஊற்றி அதை திடநிலைக்கு மாற்றி விடுவார்கள்.

அந்த ஸ்டாம்பினை நாக்கில் தடவினால் வேதிப்பொருள் கரைந்து அதிக அளவில் போதையை கொடுக்கும். இந்த போதையானது 8 மணிநேரம் முதல் 12 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய போதை தரும் பொருளை வாலிபர் ஒருவர் கருவடிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி அருகில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர் உசேன், வீரன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு போதைப்பொருளை விற்றுக்கொண்டிருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் லாஸ்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த அருண் (வயது 30) என்பது தெரியவந்தது. தனியார் மருந்து கம்பெனியின் விற்பனை பிரதிநிதியான அவர் இந்த போதை ஸ்டாம்புகளை பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்துள்ளார்.

ஸ்டாம்பு ஒன்றினை ரூ.1,500-க்கு வாங்கி வரும் அவர் அதை 4 ஆக பிரித்து ஒவ்வொன்றையும் தலா ரூ.500-க்கு விற்பனை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 போதை ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர். போதை ஸ்டாம்பு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் பாராட்டினார்.

மேலும் செய்திகள்