பாபநாசத்தில் ஓடும் வேனில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி

பாபநாசத்தில் ஓடும் வேனில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.

Update: 2019-05-25 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அய்யனாரூத்தைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவருடைய மகன் கொம்பையா (வயது 35). கொத்தனார். இவருடைய மனைவி ராமலட்சுமி (30). இவர்களுக்கு புவனேசுவரி (12), சந்திரமதி (10) ஆகிய 2 மகள்களும், கோகுல் (8) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் கொம்பையா தன்னுடைய குடும்பத்தினருடன் நெல்லை மாவட்டம் காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சரக்கு வேனில் சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் அங்கிருந்து சரக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதி சோதனைச்சாவடி அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது, சரக்கு வேனின் பின்பகுதியில் அமர்ந்து இருந்த கொம்பையா எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த கொம்பையாவுக்கு விக்கிரமசிங்கபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கொம்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்