உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேருக்கு சிறைதண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத பேக்கரி உரிமையாளர் உள்பட 2 பேருக்கு நெல்லை கோர்ட்டில் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை,
உணவுப்பொருள் விற்பனை செய்பவர்கள் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, பதிவு செய்திருக்க வேண்டும். இந்த நிலையில் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திரபோஸ் உத்தரவின்பேரில், தச்சநல்லூர் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கர நாராயணன் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது ஒரு பேக்கரியில் உணவுப்பொருள் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நெல்லை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி, உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் பேக்கரி நடத்திய உரிமையாளர் முகைதீன் அப்துல்காதர், விற்பனையாளர் நைனா முகமது ஆகிய 2 பேருக்கும் கோர்ட்டு கலையும் வரையிலும் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த தகவலை தச்சநல்லூர் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்.