தி.மு.க.கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2019-05-25 23:00 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி, அரூர்(தனி) தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அமைச்சர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் நமக்கு வெற்றி கிடைத்து உள்ளது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளோம். இந்த முடிவை கண்டு தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெற உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க.கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, நகர செயலாளர் குருநாதன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், வேலுமணி, குமார், கோபால், மாவட்ட நிர்வாகிகள் பரமசிவம், பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்