38 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி தோற்ற நிலையில் முதல் தேர்தலிலேயே வெற்றிக் கனியை பறித்த ஓ.பன்னீர்செல்வம் மகன்
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 38 இடங்களில் தோல்வி கண்ட நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றிக் கனியை பறித்துள்ளார்.
தேனி,
நாட்டில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு வெற்றிகள் குவிந்த நிலையில், தமிழகம் அதற்கு நேர்மறையாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 38 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கிடைத்த ஒரே தொகுதி தேனி மட்டுமே.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டனர். அவர்களோடு நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.
இந்த தேர்தலில் ப.ரவீந்திரநாத்குமார் 5 லட்சத்து 4 ஆயிரத்து 813 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி நாடு முழுவதும் திரும்பி பார்க்க வைத்த வெற்றியாக அமைந்துள்ளது.
வெற்றி பெற்றுள்ள ப.ரவீந்திரநாத்குமார் முதன் முதலில் தற்போது தான் தேர்தல் களத்தில் குதித்திருந்தார். இதற்கு முன்பு கட்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். பின்னர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ப.ரவீந்திரநாத்குமாருக்கு சீட் வழங்கியபோதே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தது. இதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு அவர் தனது முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்துள்ளார்.
தேர்தல் வெற்றி குறித்து ப.ரவீந்திரநாத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘நான் பெற்ற இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன். தலைமைக்கழகத்துடன் ஆலோசித்து, கலந்துரையாடி எனது செயல்பாடு இருக்கும்’ என்றார். அவரிடம், மத்தியில் உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘எதுவாக இருந்தாலும் தலைமைக்கழகத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.