அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் வேலுச்சாமி
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திண்டுக்கல் வேலுச்சாமி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்து உள்ளார்.
திண்டுக்கல்,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.வேலுச்சாமி வெற்றி பெற்றார். இவர், தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 7 லட்சத்து 46 ஆயிரத்து 523 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதனால் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இது அ.தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 19 சுற்றுகள் வரை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் தலா 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்குகள் 15 லட்சத்து 40 ஆயிரத்து 495 ஆகும். அதில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 931 வாக்குகள் பதிவாகின. இதில் சுமார் 70 சதவீத வாக்குகளை தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி அள்ளினார். இதனால் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர், என்ற சிறப்பையும் பி.வேலுச்சாமி பெற்றுள்ளார்.
பி.வேலுச்சாமியை பொறுத்தவரை தி.மு.க.வில் கட்சி உறுப்பினரை தவிர பெரிய அளவில் எந்த பொறுப்பிலும் இல்லை. எனினும், தி.மு.க. தலைமையின் நம்பிக்கையை பெற்றவராக விளங்கியதால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் களம் கண்டு வெற்றிக்கனியை பறித்து தலைமைக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். தி.மு.க. வில் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்தவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேலுச்சாமி வெற்றி பெற்ற அதேநேரம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பெற்று உள்ளார். கடும் இழுபறிக்கு பின்னர் சிதம்பரம் தொகுதியில் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை அவர் தோற்கடித்து உள்ளார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 1967-ம் ஆண்டு முதல் முறையாக தி.மு.க. வென்றது. பின்னர் 1971-ல் தி.மு.க. வேட்பாளர் ராஜாங்கம் வெற்றிபெற்றார். 1972-ல் அவர் மரணம் அடைந்ததால், 1973-ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது முதல்முறையாக தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., வெற்றிபெற்று திண்டுக்கல்லை தனதாக்கியது. அதன்பின்னர் 1980-ல் மீண்டும் தி.மு.க. வென்றது.
எனினும், அ.தி.மு.க. 8 முறை திண்டுக்கல்லில் வெற்றிபெற்று உள்ளது. எனவே, திண்டுக்கல் அ.தி.மு.க.வுக்கு ராசியான தொகுதியாக கருதப்பட்டது. இதனால் திண்டுக் கல்லில் அ.தி.மு.க. போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க. போட்டியிடவில்லை. அதற்கு மாறாக கூட்டணி கட்சியான பா.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி இருக்கும் என்றே தெரிகிறது.
இது தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாக மாறியது. அதேநேரம் 1980-ம் ஆண்டுக்கு பின்னர் திண்டுக்கல்லில் வெற்றிபெற முடியவில்லை என்ற குறைபாடு தி.மு.க.வுக்கு இருந்தது. அதோடு பெரும்பாலும் கூட்டணி கட்சியே திண்டுக்கல்ை-லை கேட்டு பெற்று வந்தது. இந்த முறை திண்டுக் கல்லை கைப்பற்றியை தீரவேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கி பம்பரமாக சுழன்று தி.மு.க.வினர் வேலை செய்தனர். அவ்வாறு வெற்றியையும் பெற்று விட்டனர்.