மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி வெற்றிக்கு காரணம் மோடி அலையா? பட்னாவிசின் சாணக்கிய தனமா?
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அபார வெற்றியை கண்டது.
மாநிலத்தில் மொத்தம்உள்ள 48 தொகுதிகளில் 41 இடங்களை கைப்பற்றி அந்த கூட்டணி சாதனை படைத்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் போல இந்த முறையும் பா.ஜனதா 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலைவிட ஒரு இடம் குறைந்து 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்துடன் திருப்தி அடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளில் வென்றது.
ஒவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியும், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் பா.ஜனதா பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடி அலை காரணம் என கூறப்படுகிறது. எனினும் மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி வெற்றிக்கு பிரதமர் மோடி மட்டுமின்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் சாணக்கிய தனமும் காரணம் என்று கூறப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம், மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினை, பீமா-கோரேகாவ் கலவரம் போன்ற பிரச்சினைகளை அவர் சாமர்த்தியமாக கையாண்ட விதம், சிவசேனாவை கூட்டணியில் தக்க வைத்தது மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கு வழிவகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மராட்டியத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிவசேனாவின் உதவி தேவை என்பதை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நன்கு உணர்ந்து இருந்தார். எனவே தான் கடந்த 5 ஆண்டுகளாக சிவசேனாவினர் வெறுப்பை உமிழ்ந்த போது எல்லாம் பொறுமையுடன் எதிர்கொண்டார். மேலும் உத்தவ் தாக்கரே உடனான உறவை வலுவாக வைத்து இருந்தார். அதுவே தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு வழிவகை செய்தது.
மேலும் கூட்டணி அமைந்த பிறகு பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் சிவசேனா வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர களப்பணிகளில் ஈடுபடுவதை முதல்-மந்திரி உறுதி செய்தார்.
இதேபோல அவர் காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், சுப்ரியா சுலே உள்ளிட்ட பெரிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பலம்வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தினார். மாநிலம் முழுவதும் 96-க்கும் அதிகமான பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதுதவிர அதிருப்தி தலைவர்களான காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மகன் சுஜய் விகே பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சித் சிங் நாயக் நிம்பல்கர் ஆகியோரை பா.ஜனதா பக்கம் இழுத்தார். இவர்கள் 2 பேரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் அபய் தேஷ்பாண்டே கூறுகையில், ‘‘மோடி அலை, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் கடின உழைப்பு, அவரின் தேர்தல் வியூகம், வேட்பாளர் தேர்வு போன்றவை தான் பா.ஜனதா கூட்டணிக்கு இந்த வெற்றியை கொடுத்து உள்ளது. கூட்டணியைவிட்டு வெளியேறுவோம் என அச்சுறுத்தி வந்த சிவசேனாவை தக்கவைத்ததும் பா.ஜனதாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என்றார்.
எனினும் மராட்டியத்தில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைய பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் அசாதுதீன் ஒவைசி ஆகியோரின் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி காரணமாக இருந்து உள்ளது.
எதிர்க்கட்சிகள் வஞ்சித் பகுஜன் அகாடியை பா.ஜனதாவின் ‘பி' டீம் என குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனக்கு எதிராக இருந்த தலித், தங்கர் சமூகத்தினருக்கு ஒரு மேடையை அமைத்து கொடுத்து சாமர்த்தியமாக அரசியல் செய்தார். அதில் தெரிந்தோ, தெரியாமலோ அந்த சமுதாய மக்கள் சிக்கி கொண்டனர்’’ என்றார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை முதல்-மந்திரி மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்கள் வேட்பாளர்கள் ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு மேல் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளனர். வஞ்சித் பகுஜன் அகாடியால் நாங்கள் வெற்றி பெறவில்லை’ என்றார்.