மராட்டியத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு வேட்டு வைத்த வஞ்சித் பகுஜன் அகாடி

மராட்டியத்தில் 8 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வஞ்சித் பகுஜன் அகாடியால் வீழ்ந்தனர்.

Update: 2019-05-25 00:00 GMT
மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் பாரிபா பகுஜன் மகாசங் கட்சியும், அசாதுதீன் ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் இணைந்து வஞ்சித் பகுஜன் அகாடி என்ற பெயரில் 3-வது அணி உருவானது.

காங்கிரஸ் கூட்டணியுடன் பிரகாஷ் அம்பேத்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்த புதிய அணி முளைத்தது. இந்த அணி பல தொகுதிகளில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை விழுங்கி விடும் என்று கருதப்பட்டது. அதுபோலவே தேர்தல் முடிவும் அமைந்து விட்டது.

குறிப்பாக அகோலா, புல்தானா, கட்சிரோலி-சிமூர், ஹட்கனங்கலே, நாந்தெட், பர்பானி, சாங்கிலி, சோலாப்பூர் ஆகிய 8 தொகுதிகளில் வாக்குகளை பிரித்து காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை வஞ்சித் பகுஜன் அகாடி துவம்சம் செய்து விட்டது.

இந்த தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்களோ, அதை விட கூடுதல் வாக்குகளை வஞ்சித் பகுஜன் அகாடி அள்ளியது.

குறிப்பாக புல்தானா தொகுதியில் சிவசேனா வேட்பாளரிடம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 287 வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஆனால் இந்த தொகுதியில் வஞ்சித் பகுஜன் அகாடி வேட்பாளர் 1 லட்சத்து 72 ஆயிரத்து 627 ஓட்டுகள் பெற்று இருந்தார்.

ஒருவேளை வஞ்சித் பகுஜன் அகாடி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று இருந்தால், இந்த தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுலபமாக வெற்றி பெற்று இருக்கக்கூடும்.

இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் வீழ்ச்சிக்கு பிரகாஷ் அம்பேத்கர் உருவாக்கிய வஞ்சித் பகுஜன் அகாடி காரணமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்