தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மாநில அந்தஸ்துபெற கடும் முயற்சி எடுக்கவேண்டும் வைத்திலிங்கத்துக்கு மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள்

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற கடும் முயற்சி எடுக்கவேண்டும் என்று வைத்திலிங்கத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-05-24 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் ஓட்டுக்காக பணத்தையும் தராமல் மக்கள் நீதி மய்யம் சந்தித்தது. அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பரவலான ஓட்டுகளை மக்கள் அளித்துள்ளனர்.

வாக்காளித்த வாக்காள பெருமக்களுக்கும் உழைத்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வருங்காலத்தில் மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் நிலை உயரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்களின் அன்றைய தேவைக்காக வாக்கு அளிக்காமல், எதிர்கால சிறந்த ஆட்சிக்காக, மக்களுக்கு சிறந்த சேவையாளரை தேர்வு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் வாக்களித்துள்ளனர். எனவே மக்கள் நீதி மய்யத்திற்கான வாக்குகள் உயரும்போதுதான் ஆட்சியில் நல்ல நிர்வாகத்தை தர முடியும்.

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலம் புதுச்சேரியின் முக்கிய தேவைகளாக உள்ள மத்திய அரசின் கடன் தள்ளுபடி, மாநில அந்தஸ்து, மத்திய அரசின் கூடுதல் மானியம் ஆகியவைகளை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி பெற்றுத்தர கடும் முயற்சி எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்