ஓட்டு எண்ணிக்கை முடிந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தாசில்தார் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் தாசில்தார் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-05-24 23:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிந்து தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் பொருத்தியிருந்த 100 கண்காணிப்பு கேமராக்கள் நேற்று அப்புறப்படுத்தப்பட்டன. கல்லூரியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் பணி நடந்தது.

பெருந்துறை, பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவே அனுப்பிவைக்கப்பட்டு அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்குள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்லடம், அவினாசி, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் திருப்பூர் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி திருப்பூர் வடக்கு, அவினாசி சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திலும், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காங்கேயம் தாசில்தார் அலுவலகத்திலும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்லூர் 3-வது மண்டல அலுவலகத்திலும், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்