வேளாண் விரிவாக்க மையத்தை வேறு இடத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு

வேளாண் விரிவாக்க மையத்தை வேறு இடத்துக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-05-24 22:00 GMT
திருவரங்குளம், 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் கடந்த 1967-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் அண்ணாதுரையால் வேளாண் விரிவாக்க மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த வேளாண் விரிவாக்க மையம் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், பயறு வகை கள், நெல் விதைகள், உளுந்து வகைகள் உள்ளிட்டவைகளை மானிய விலையில் வழங்கி வந்தது.

மேலும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வேளாண் உபகரணங்கள், மானிய விலையில் வேளாண் பொருட்கள், உரம், பூச்சி மருந்து ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வேளாண் விரிவாக்க மையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் திருவரங்குளம் பகுதி விவசாயிகளுக்கு எந்த பொருட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது. வேளாண் விரிவாக்க மையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வேளாண் விரிவாக்க மையம் வேறு இடத்திற்கு மாற்றப்படாது எனக்கூறி சமரசம் செய்து வைத்தனர். ஆனால் தற்போது வேளாண் விரிவாக்க மையம் வேறுஇடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. மீண்டும் திருவரங்குளத்திலேயே வேளாண் விரிவாக்க மையம் செயல்பட வேண்டும் எனக்கூறி இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்