நாடாளுமன்ற தேர்தலில் திருநாவுக்கரசர் வெற்றி: தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2019-05-24 22:45 GMT
புதுக்கோட்டை, 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திரு நாவுக்கரசர் நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு புதுக்கோட்டை நகர எல்லையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள புதுக்கோட்டை மன்னர் ராஜ கோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர், சத்தியமூர்த்தி, எம்.ஜி.ஆர்., அண்ணா, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்து உள்ளது. மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர, அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும், நீண்டகால நண்பர்கள், பழக்கமானவர்கள் என ஏராளமானபேர் வாக்களித்ததால் தான் அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்று உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா?. மீண்டும் வாக்குச்சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்று தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து ஊர்வலமாக சென்றார். முன்னதாக கீரனூருக்கு வந்த திருநாவுக்கரசருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் காந்தி மற்றும் அண்ணாசிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்தவேனில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றார்.

அதன்பின் கந்தர்வகோட்டைக்கு சென்ற அவர், அப் பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் கந்தர்வகோட்டையில் உள்ள காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்