திருச்செங்கோடு அருகே பயங்கரம்: கணவன் கழுத்தை அறுத்துக்கொலை நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி ஆத்திரம்

திருச்செங்கோடு அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவன் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்தார்.

Update: 2019-05-24 23:15 GMT

எலச்சிபாளையம், 

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 66), தறி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கல்யாணசுந்தரம் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி (46) என்பவரை 2–வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதற்கிடையே கல்யாணசுந்தரத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. பூங்கொடியின் நடத்தையிலும் கல்யாணசுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணியளவில் தறிப்பட்டறை வேலைக்கு செல்வதாக கூறி கல்யாணசுந்தரம் புறப்பட்டார். அப்போது நானும் உங்களுடன் வருகிறேன் என பூங்கொடி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது கல்யாணசுந்தரம் பூங்கொடியை பார்த்து, என்னுடன் வந்தால் கத்தியால் குத்தி விடுவேன், என மிரட்டியபடி கத்தியை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பூங்கொடி கல்யாணசுந்தரத்தை கீழே தள்ளி கையில் இருந்த கத்தியை பிடுங்கி கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்துள்ளார். அதன்பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

கழுத்து அறுபட்ட கல்யாணசுந்தரம் வலிதாங்க சத்தம் போட்டார். கதவு மற்றும் ஜன்னல்களை தட்டினார். இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு வந்த பூங்கொடியிடம இதுபற்றி கேட்டனர். அதற்கு பூங்கொடி, தன்னை கொலை செய்ய கத்தியை எடுத்து கொண்டு கல்யாணசுந்தரம் துரத்தியதாகவும், தான் தப்பி வந்து வெளிப்புறமாக கதவை தாளிட்டு இருந்ததாகவும் கூறி நாடகமாடி உள்ளார். இதற்கிடையே கழுத்து அறுபட்ட கல்யாணசுந்தரம் இறந்தார்.

ஆனால் எவுதுமே அறியாததுபோல் மயக்கமடைந்தவர் போல் பூங்கொடி நாடகமாடினார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் திருச்செங்கோடு ரூரல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பூங்கொடியிடம் போலீசார் விசாரித்தனர். பூங்கொடி போலீசாரிடமும் கல்யாணசுந்தரம் தானே கழுத்தை அறுத்து கொண்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் பூங்கொடி கூறியுள்ளார்.

வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கல்யாணசுந்தரம், பூங்கொடியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் அன்றைய தினம் நடந்த சண்டையில் ஆத்திரத்தில் கல்யாணசுந்தரம் கழுத்தை பூங்கொடி அறுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து பூங்கொடியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்