8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கலசபாக்கம் அருகே சென்னை - சேலம் 8 வழிச்சாலை அமைக் கக்கூடாது என்று போராட்ட குழுவினர் விவசாய நிலத்தில் நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலசபாக்கம்,
சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னை வரை 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. இந்த திட்டத்திற்காக மாநில அரசு அதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை செய்து வந்தது.
இந்த திட்டத்துக்கு விவசாய நிலங்களும் கையகப்படுத்த அளவீடு செய்யப்பட்டது. நிலம் பறிபோகும் நிலை ஏற்பட்டதால் திட்டத்துக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சில விவசாயிகள் கையகப்படுத்தும் நிலத்திற்கு தொகையை உயர்த்தி வழங்கவும், பாதிக்கப்படும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் 8 வழிச்சாலைக்கு எதிராக போராடுவதற்கு போராட்டக்குழு ஒன்று திருவண்ணாமலையில் உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்குழுவினர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 8 வழிச்சாலை திட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
இந்த நிலையில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்படும் என கூறி உள்ளதை கண்டித்து திருவண்ணாமலை 8 வழிச்சாலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் நேற்று கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு மாசிலாமணி நிலத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 8 வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியை பிடித்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.