நாட்டார்மங்கலம் ஏரியை தூர்வாரும் பணியில் இறங்கிய இளைஞர்கள்

நாட்டார்மங்கலத்தில் உள்ள ஏரியில் இளைஞர்கள் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர்.

Update: 2019-05-23 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஒரு ஏரி உள்ளது. சுமார் 50 ஏக்கருக்கு மேலான பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் மழை பெய்யும் போது பெருகும் தண்ணீரால், அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பயன்பெற்று வந்தன. தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே அந்த ஏரியை சுற்றிலும், உள்ளேயும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை பெய்யும் போது ஏரிக்கு வரும் தண்ணீரை அந்த மரங்களை உறிஞ்சி விடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகிறது. மேலும் ஏரியில் செடி, கொடிகள், முட்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. இதையடுத்து நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை வைத்து, அதனை ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி வந்தது.

பாராட்டு

பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து ஏரி அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. இதனை கண்ட நாட்டார்மங்கலம் இளைஞர்களின் மனதில் அந்த ஏரியை தூர்வார வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அதிகாரியிடம் ஏரியை தூர்வார அனுமதி பெற்றனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த நிதியில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அந்த ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முதற்கட்டமாக அகற்றும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அந்த கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உதவி செய்ய வேண்டும்

இதுகுறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், தற்போது எங்கள் ஊரின் ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றி விட்டு, ஏரியை ஆழப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் ஏரிக்கரையை சுற்றிலும் பனை மரங்களை நடஉள்ளோம். மழை பெய்யும் போது ஏரியில் அதிகளவு தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் முடியும். இதனால் விவசாயம் செழிக்கும். ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்பதால் ஊர் பொதுமக்களும் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மேலமாத்தூரில் உள்ள வெள்ளாற்று ஏரியை அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தூர்வாரினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்