நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி, பா.ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து பா.ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.;
திண்டுக்கல்,
நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா கட்சி அமோக வெற்றி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து திண்டுக்கல்லில் பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதன்படி திண்டுக்கல் பஸ்நிலையம், ஆர்.எம்.காலனி, ஓய்.எம்.ஆர்.பட்டி, வ.உ.சி.நகர், சீலப்பாடி, பாறைப்பட்டி ஆகிய இடங்களில் அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அப்பகுதிகளில் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். நகர மேற்கு பகுதி தலைவர் மணிவேல், கிழக்கு பகுதி தலைவர் லட்சுமணன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், திண்டுக்கல் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பா.ஜனதா கட்சியின் வேடசந்தூர் தொகுதி பொறுப்பாளர் சதாசிவம் தலைமையில் அந்த கட்சியினர் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் நாட்ராயன், செயலாளர் தங்கவேல், விவசாய அணி மாவட்ட செயலாளர் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் பா.ஜனதா நகர தலைவர் பரசுராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் அந்த கட்சியினர் கொண்டாடினர். இதில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி பிரித்தா, மாவட்ட நிர்வாகிகள் ராஜா, சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகர் வெற்றி பெற்றதையடுத்து அந்த கட்சியினர் நிலக்கோட்டையில் பட்டாசு வெடித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதற்கு நிலக்கோட்டை நகர பொறுப்பாளர் முத்து தலைமை தாங்கினார். கொங்கர்குளம் கிளை செயலாளர் கருப்பையா, பொறுப்பாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.