சாலமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான தொட்டியில் தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

சாலமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-05-23 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் ஒரு ஊராட்சிக்கு தலா ஒரு குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்யப்பட்டு உள்ளது. படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ரூ.20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி மூலம் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஊராட்சி நிர்வாகம் மூலம் நாள்தோறும் கால்நடைகளுக்கான பொது குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பி வைக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பி வைப்பதால் அங்கு வரும் கால்நடைகள் அந்த நீரை குடித்து தாகத்தை தீர்த்து கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது இந்த கோடை காலத்தில் ஏற்பட்டு இருக்கும் கடும் வெயிலில் கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குடிநீர் தொட்டிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் வெயிலில் சுற்றித்திரியும் கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு குடிநீர் தொட்டியை நோக்கி வரும்போது தொட்டிகளில் தண்ணீர் இல்லாததால் பெருத்த ஏமாற்றம் அடைந்து அவதிக்குள்ளாகி வருகின்றன. கால்நடைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பி வைத்து பராமரிப்பு பணியை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்