ராமநாதபுரத்தில் பட்டப்பகலில், பெயிண்டர் குத்திக்கொலை - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ராமநாதபுரம் நகரில் பட்டப்பகலில் முன் விரோதம் காரணமாக பெயிண்டரை கத்தியால் குத்திக் கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2019-05-22 22:53 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மகன் நானா என்ற நாகநாதன்(வயது45). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி முத்துமாரி என்ற மனைவியும் 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ராமநாதபுரம் ரெயில்நிலையம் குட்செட் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த நாக நாதனை ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்துவிழுந்த நாகநாதன் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் முனியசாமி மகன் ராஜ்குமார் என்ற கொக்கி குமார்(26) என்பவர் தலைமையில், ராமநாதபுரம் சத்திரத்தெரு பாலகிருஷ்ணன் மகன் தயா என்ற தயாநிதி, ஆட்டோ டிரைவர் எம்.எஸ்.கே.நகர் ராமு மகன் அருண் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொக்கி குமாரும், நாகநாதனும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக கஞ்சா விற்பனை செய்து வந்தார்களாம். அதுதொடர்பாக தொழில் போட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அந்த பகுதியில் இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாகநாதனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் துணிகரமாக மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவத்தில் முக்கிய நபரான கொக்கி குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்