பொன்னேரியில் கோவில் அதிகாரியை வெட்டிய வழக்கில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை சேர்ந்தவர்கள்
பொன்னேரியில் கோவில் அதிகாரியை வெட்டிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பதீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (வயது 27). கடந்த 12-ந்தேதி கோவில் பணியை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கோவில் ஊழியர்களான தனஞ்செழியன் (வயது 27), தனசேகர் (24), வெங்கடேசன் (28), தினேஷ் (27) மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சதீஷ் (26), கிருபாகரன் (20) ஆகியோரை கடந்த 18-ந்தேதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்த சோழவரத்தை அடுத்த கம்மவார்பாளையத்தை சேர்ந்த சிம்பு (20), கோகுல் (20), வடகரை கோமதியம்மன் நகரை சேர்ந்த வினோத் (21), பர்மா நகரை சேர்ந்த ரமேஷ் (32) என்பது தெரியவந்தது.
அவர்களை சோழவரம் போலீசார் கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.