ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2019-05-22 22:15 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களும், ஊடகங்களும் விவாதம் செய்யும் பிரச்சினை காலநிலை மாற்றம். புவியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இனி வரும் காலங்களில் மிகவும் மோசமான சூழ்நிலையை பார்க்க உள்ளோம். இது சம்பந்தமாக ஐ.நா.சபை எச்சரித்து உள்ளது. வருகிற 2020-ம் ஆண்டுக்கு பின் எரிபொருளை குறைக்க வேண்டும்.

வருங்காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நதி நீருக்கு தனி அமைச்சகம் என்பது நல்ல முடிவு. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜூன் 12-ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்போம்.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் நீர் மேலாண்மை குறித்து பேசுவதற்கு பா.ம.க. தான் காரணம். முதல்-அமைச்சரும் தடுப்பணைகள் கட்ட முக்கியத்துவம் தந்து கொண்டு இருக்கிறார். தர்மபுரி தொகுதியில் ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்து 7 திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு உள்ளது. காவிரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாத திட்டமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சட்டம் கொண்டு வரப்படும். சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் கோர்ட்டையும், சட்டத்தையும் மதித்து தான் அடுத்த பணியை மேற்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்