கள்ளக்காதலியின் தந்தை கடத்தல் வாலிபர் கைது

சேர்ந்து வாழ வலியுறுத்தி கள்ளக்காதலியின் தந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-05-22 22:30 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை அயனாவரம் பரசுராம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதன். இவருடைய மகள் ஆரத்தி(வயது 20). இவருக்கு, பிரவீன் என்பவருடன் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக ஆரத்தி, கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.

இதற்கிடையில் ஆரத்திக்கும், அயனாவரம் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த சுபாஷ் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2 வருடங்களாக கள்ளக்காதலன் சுபாசுடன் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

சுபாசுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆரத்தி அவரைவிட்டு பிரிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வரதனை அழைத்துச் சென்ற சுபாஷ் அவருக்கு மது வாங்கி கொடுத்தார். பின்னர் போதையில் இருந்த அவரை ஆட்டோவில் பட்டாபிராமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடத்திச் சென்றார்.

பின்னர் கள்ளக்காதலி ஆரத்திக்கு செல்போனில் தொடர்பு கொண்ட சுபாஷ், “உனது தந்தையை கடத்தி வைத்து உள்ளேன். என்னுடன் நீ சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தால் அவரை விடுவிக்கிறேன்” என்றார்.

இதுபற்றி அயனாவரம் போலீசில் ஆரத்தி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து, சுபாசை தேடிவந்தார். இதையறிந்த சுபாஷ், கடத்தப்பட்ட வரதனை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

அப்போது போலீசார் சுபாசை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்