நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து வி.வி.பாட் எந்திர ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு
வி.வி.பாட் எந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிய பிறகே நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கலெக்டர் அருண் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்பட உள்ளது. தேர்தல் துறையினால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதையொட்டி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். புதுவை மையத்தில் 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலா ஒரு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவார்கள்.
அதன்பின் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணி சரிபார்க்கப்படும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிய கால தாமதமாகும்.
ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி முடிக்க நாளை அதிகாலை 3 மணி ஆகிவிடும். அதன்பின் வி.வி.பாட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும். மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில்தான் வெற்றி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் அருண் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.