வானவில் : ஒன் பிளஸ் 7 அறிமுகம்
புதிய மாடலான ஒன் பிளஸ் 7 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் ஐ போனுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஒன் பிளஸ் நிறுவனம் தனது புதிய மாடலான ஒன் பிளஸ் 7 மாடல் ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்தியாவில் பெங்களூரு நகரிலும், லண்டன், நியூயார்க் நகரிலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆண்டுக்கு ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இதனாலேயே அறிமுக விழாவை மிகப் பெரிய உள் விளையாட்டு அரங்கில் இந்நிறுவனம் நடத்துகிறது.
ஒன் பிளஸ் 7 மாடல் ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்ட்களில் அதாவது இரண்டு விதமான நினைவக வசதி கொண்டவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன் பிளஸ் 7 மாடலில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை ரூ.32,999 ஆகும். இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடல் விலை ரூ.37,999 ஆகும்.
8 ஜி.பி. ரேம் மாடலில் மிரர் கிரே மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும். அறிமுகவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டாலும், இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம்தான் விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுக சலுகையாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.9,300 க்கான சலுகையும் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இரட்டை சிம் (நானோ) வசதி கொண்டது, ஆக்சிஜன் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஆண்ட்ராய்டு 9.0 பை தொழில்நுட்பம் கொண்டது. இதன் திரை 6.41 அங்குலம் கொண்டது. முழு டிஸ்பிளே உடையது. இதில் குவால்காம் ஸ்னாப் டிராகன் உடையது. ஒன் பிளஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் செயல்பாடு நிச்சயம் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.