அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் : மராத்தா சமூக மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்
அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததை அடுத்து மராத்தா சமூக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மும்பை,
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு மாநில அரசு சட்டம் நிறைவேற்றியது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டுக்கான மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் மராத்தா சமூக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
எனினும் மருத்துவ மேல்படிப்பில் மராத்தா சமூக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மராத்தா சமூக மருத்துவ மாணவர்கள் சுமார் 250 பேர் மும்பை ஆசாத் மைதானத்தில் கடந்த 2 வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், மாநில அரசு மராத்தா சமூக மாணவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்தை நிறைவேற்றியது. அந்த அவசர சட்டத்துக்கு மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மராத்தா சமூக மருத்துவ மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.