அமைச்சரை பதவி நீக்க கோரி மக்கள் நீதிமய்யம் கட்சியினர் கவர்னருக்கு கடிதம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கவர்னருக்கு கடிதம் அனுப்பினர்.

Update: 2019-05-21 23:00 GMT
திருச்சி,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, “காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி“ என்று பேசினார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்தபோது, ‘கமல்ஹாசனின் நாக்கை அறுப்போம்‘ என்று கூறி இருந்தார். இதற்கு கமல்ஹாசன் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல் கிஷோர்குமார் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மண்டல பொறுப்பாளர் சுரேஷ், நிர்வாகிகள் சங்கரமகாராஜா, கணேஷ், வக்கீல் சுரேஷ் மற்றும் பலர் காந்தி வேடமிட்ட சிறுவனுடன் வந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இவர்கள் ஸ்ரீரங்கம் சாத்தாரவீதியில் உள்ள தபால் நிலையம் முன்பு திரண்டு அங்குள்ள தபால் பெட்டியில் கடிதங்களை போட்டனர். 

மேலும் செய்திகள்