கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை - சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

சீராக குடிநீர் வழங்க கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-21 22:15 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியனுக்கு உட்பட்டது இளம்புவனம் கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்காக சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அந்த குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, மோட்டார் மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த தண்ணீரும் பொதுமக்களுக்கு சீராக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் உள்ளனர். ஆனால் தினமும் 50 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சீராக குடிநீர் வழங்க கோரியும், அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தாலுகா செயலாளர் பாலமுருகன், இளம்புவனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் மூக்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த யூனியன் ஆணையாளர் கிரி சம்பவ இடத்துக்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சீராக குடிநீர் வழங்கவும், அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கவும் உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்