நெரிஞ்சிப்பேட்டை கதவணை பகுதியில் மீன் பிடித்த, மீனவரை 3 மணி நேரம் அரை நிர்வாணமாக நிற்க வைத்த மின் ஊழியர்கள்

நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலைய பகுதியில் மீன் பிடித்த மீனவரை 3 மணி நேரம் அரை நிர்வாணமாக நிற்க வைத்தது மனிதாபிமானமற்ற செயல் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2019-05-21 22:30 GMT
அம்மாபேட்டை, 

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது நெரிஞ்சிப்பேட்டை. இங்குள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மின் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கதவணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் இரவு கதவணையில் உள்ள அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டு தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று அதிகாலை கதவணையில் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிட்டது.

வடிந்த தண்ணீரில் மீன் பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் குவிந்தனர். அவர்கள் அதிகாலை முதலே கதவணை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்களுடன் நெரிஞ்சிப்பேட்டையை அடுத்த சித்தையன் நகரை சேர்ந்த மீனவரான சித்தையன் (வயது 33) என்பவரும் மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் காலை 6 மணி அளவில் அவர் கதவணையின் சுரங்கப்பாதை பகுதிக்கு சென்று மீன் பிடித்தார். இதை கண்டதும், அவரை அங்கிருந்து வெளியேறும்படி மின் வாரிய ஊழியர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார். வெளியே வந்த அவரிடம் இருந்து வலை, 5 கிலோ மீன், செல்போன், அவரது ஆடைகள் ஆகியவற்றை மின் வாரிய ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றை கொடுக்காமல் மின் வாரிய ஊழியர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் ஜட்டியுடன் நின்று கொண்டிருந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த வழியாக சென்றவர்கள் அந்த காட்சிகளை பார்த்தனர்.

இதனால் அவர் கதவணை பாலத்தின் பகுதிக்கு ஓடிச்சென்று அங்குள்ள செடி மறைவில் ஒளிந்து கொண்டார். அப்போது அந்த வழியாக சித்தையன் நகரை சேர்ந்த ஒருவர் சென்றார். அவரிடம் சித்தையன் நடந்ததை விளக்கி மின் வாரிய ஊழியர்களிடம் தன்னுடைய ஆடைகளை வாங்கி வரும்படி கூறினார்.

உடனே அவரும் மின் வாரிய ஊழியர்களிடம் சென்று சித்தையனின் ஆடைகளை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் ஆடைகளை கொடுக்க மின் வாரிய ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் அவர் சித்தையனின் வீட்டுக்கு சென்று விவரங்களை கூறி ஆடைகளை வாங்கிக்கொண்டு காலை 9 மணி அளவில் வந்தார். ஆடைகளை கொடுத்த பின்னர், சித்தையன் அதை அணிந்து கொண்டு செடி மறைவில் இருந்து வெளியே வந்தார். தொடர்ந்து 3 மணி நேரம் அரை நிர்வாண கோலத்தில் மீனவர் நின்ற சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒன்று திரண்டு சென்று மின் வாரிய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் பகல் 11 மணி அளவில் சித்தையனின் ஆடைகள், செல்போன் ஆகியவற்றை மின் வாரிய ஊழியர்கள் கொடுத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘சித்தையன் தடை செய்யப்பட்ட பகுதியில் சென்று மீன் பிடித்ததால், அவர் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை அதிகாரிகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஆடைகள், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு அரை நிர்வாண கோலத்தில் செடி மறைவில் நிற்க வைத்தது மனிதாபிமானமற்ற செயல். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்