பெரியகுளம் அருகே, அரசு பஸ் மோதி பெண் படுகாயம் - பொதுமக்கள் சாலைமறியல்

பெரியகுளம் அருகே அரசு பஸ் மோதி பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வேகத்தடுப்பு அமைக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2019-05-21 22:15 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி நாகஜோதி(வயது 38). இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை நாகஜோதி கைலாசபட்டியில் சாலையை கடந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் நாகஜோதி மீது மோதியது. இதில் நாகஜோதி கால் முறிந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தில் வேகத்தடுப்பு அமைக்க கோரி பொதுமக்கள் கைலாசபட்டியில் உள்ள தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அப்பகுதியில் உடனடியாக வேகத்தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியலை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேகத்தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அவர் உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே நாகஜோதி விபத்துக்குள்ளானது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் பாண்டியராஜ்(44) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்