புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-05-20 22:45 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து பிரிந்து தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை வளப்படுத்தும் ஆறு புது ஆறு. இதை கல்லணை கால்வாய் என்றும் அழைப்பார்கள். புதுஆற்றின் கரை பலமாக இல்லாததால் முழு கொள்ளளவில் தண்ணீர் திறந்து விடப்படும்போது உடைப்பு ஏற்படுகிறது.

தண்ணீர் திறந்துவிடப்படும் நேரத்தில் மட்டும் அதிகாரிகள் பலவீனமான கரை பகுதிகளில் சவுக்கு கட்டைகளை ஊன்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடைப்பு ஏற்படாமல் இருக்க தற்காலிக நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இவ்வாறு தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம் 26-ந் தேதி கல்விராயன்பேட்டை கீழ்ப்பாலம் பகுதியில் உள்ள புதுஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

புதுஆற்றின் கரை எப்போதும் பலமாக இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது புதுஆறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. புதுஆற்றில் பூதலூர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் சவுக்கு கட்டைகள், மணல் மூட்டைகள் மூலமாக தற்காலிகமாக கரை பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆற்றில் முழு அளவு தண்ணீர் வந்தால் இந்த இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே புதுஆற்றின் கரையை நிரந்தரமாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கர்நாடகாவில் கன மழை பெய்தால் புதுஆற்றில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

எனவே தற்காலிக நடவடிக்கைகளை கைவிட்டு, ஆற்றின் கரையை நிரந்தரமாக பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்