சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயார் கலெக்டர் ரோகிணி பேட்டி
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
இந்தநிலையில், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திவாகரன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வெளியில் இருந்து எடுத்து வரவேண்டி பொருட்கள் மற்றும் எடுத்து வரக்கூடாத பொருட்கள் குறித்து கலெக்டர் ரோகிணி விரிவாக பேசினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின் முடிவுகள் குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்த பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கையின்போது செல்போன், பேனா, ஆயுதம் போன்ற பொருட்கள் எடுத்து வரக்கூடாது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
ஒரு தொகுதிக்கான சுற்று முடிவுகள் வெளியானதும், குலுக்கல் முறையில் 5 விவிபாட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்தபின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.