நாமக்கல்லில் கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு நீச்சல் பழக சென்றபோது பரிதாபம்

நாமக்கல்லில் நீச்சல் பழக சென்றபோது, கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-05-20 23:00 GMT
நாமக்கல், 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் நாகராஜ் (வயது 15). இவன் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளான். இவனது மாமா மகன் ஊட்டியை சேர்ந்த பிரவின் (9). இவர்கள் இருவரும் நாமக்கல் கொசவம்பட்டியில் உள்ள தாத்தா சந்திரசேகரன் வீட்டிற்கு கோவில் திருவிழாவுக்கு வந்து இருந்தனர்.

இந்த நிலையில் நாகராஜ், பிரவின் ஆகிய இருவரும் நீச்சல் பழகுவதற்காக சந்திரசேகரனின் வீட்டிற்கு அருகே உள்ள ஊர் பொது கிணற்றிற்கு சென்றனர். அங்கு எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதை பார்த்ததும் அங்கு குளித்து கொண்டு இருந்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து சிறுவன் பிரவினை உயிருடன் மீட்டனர். ஆனால் நாகராஜ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டான்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் தீயணைப்புத்துறையினர் நாகராஜ் உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகராஜ் உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த சிறுவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்