திருவேங்கடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
திருவேங்கடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவேங்கடம்,
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா வரகனூர் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மேலும் ஒரு ஆலை அனுமதி இன்றி செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவேங்கடம் துணை தாசில்தார் புஷ்பாராணி, சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் திருவேங்கடம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் செல்லமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது செல்லபட்டி-வரகனூர் சாலையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பட்டாசு ஆலை அனுமதியின்றி செயல்பட்டது, அதாவது உரிமம் காலாவதியான பிறகு செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் ஆலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அறைகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஆலைக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சூரார்பட்டியை சேர்ந்த காளிராஜ் (45), நெல்லை மாவட்டம் மாங்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி (50) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் பட்டாசு ஆலை அதிபர் ராமச்சந்திரனை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் கூறுகையில், ‘தொழிலாளர்கள் பட்டாசு ஆலைகளுக்கு வேலைக்கு செல்வதற்கு முன்பு அந்த ஆலை உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா? அனுமதி பெற்ற பட்டாசுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறதா? என்பன போன்றவற்றை அறிந்து கொண்டு வேலைக்கு செல்லுங்கள். சட்டவிரோதமாக செயல்படும் ஆலைகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம்’ என்றார். அனுமதியின்றி செயல்பட்ட ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் திருவேங்கடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.