பழமை வாய்ந்த இடைக்காட்டூர் தேவாலய கட்டிடம் ரூ.80 லட்சம் செலவில் புனரமைப்பு
மானாமதுரை அருகே பழமை வாய்ந்த இடைக்காட்டூர் திரு இருதய திருத்தல தேவாலயம் உள்ளது. இந்த தேவாலய கட்டிட சுவர்கள் சேதமடைந்து இருப்பதால் பராமரிப்பு பணிகள் ரூ.80 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளன.
மானாமதுரை,
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு இருதய திருத்தலம் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான கோதிக் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட தேவாலயம் இது. இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இதுதவிர பாஸ்கு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.
30 அடி உயரம் கொண்ட 59 தூண்கள் மூலம் 7 ஆயிரத்து 500 அடி சுற்றளவு கொண்ட சுவர்கள் மூலம் தேவாலயம் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. பெரும் மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றை தாங்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த தேவாலய தூண்களில் ஏழு அடி உயரத்திற்கு ஈரத்தன்மை உள்ளதால் தூண்களின் தாங்கு திறன் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பழமை சின்னங்களை ஆய்வு செய்யும் 3 நிபுணர் குழு, தேவாலய சுவரில் உள்ள சுண்ணாம்பு காரைகள், ஈரம் பாதித்த செங்கல்களை அகற்றி விட்டு நவீன முறையில் சிமெண்டு பூச்சு மூலம் தூண்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்காக 80 லட்ச ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தேவாலய பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இடைக்காட்டூர் திரு இருதய திருத்தல பணியாளர் ரெமிஜியஸ் கூறுகையில், தேவாலயத்தின் கட்டிட சுவர்கள் உள்ளிட்டவைகள் நல்ல நிலைமையில் உள்ளன. கட்டிடத்தின் வெளிபுறம், உள்புறம் தூண்களின் தாங்குதிறன் தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழு அடி உயரத்திற்கு ஈரம் சார்ந்துள்ளதால், சுண்ணாம்பு காரை வலுவிழந்துள்ளது. அவற்றை அகற்றி விட்டு அதே நேரத்தில் நவீன முறையில் சிமெண்டு பூச வேண்டும், இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒருசில மாதங்களில் பணிகள் நிறைவு பெறும் என்றார்.