மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-19 22:30 GMT
மேட்டுப்பாளையம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் மேட்டுப்பாளையம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், நேற்று காலை மதியம் 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சஞ்சய் (18), வருண் (19), ஹரி (16), சூரியா (19) ஆகியோருடன் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை அடுத்த விளாமரத்தூர் குண்டுக்கல்துறை பவானி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அவர்கள் 5 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் அனைவரும் ஆற்றில் இறங்கி குளிக்க தயங்கினர். இதில் தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்தார். மற்றவர்கள் கரையில் நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்