இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது: சூலூர் தொகுதியில் 79.41 சதவீத ஓட்டுப்பதிவு
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 79.41 சதவீதம் ஓட்டுப்பதிவானது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் வி.பி.கந்தசாமி, தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அ.ம.மு.க. சார்பில் சுகுமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் உள்பட 22 பேர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சூலூர் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் 778 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 389 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வி.வி. பேட் எந்திரங்கள் 422-ம் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர மொத்த எந்திரங்களில் 20 சதவீத எந்திரங்கள் அவசர தேவைக்காக தயாராக வைக்கப்பட்டு இருந்தன.
சூலூர் தொகுதிக்கு உட்பட்ட 324 வாக்குச்சாவடிகளிலும் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அனைத்து கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதன்பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
கோவை சின்னியம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 25 வாக்குகள் பதிவாகின. வெங்கிட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் காலை 7.30 மணியளவில் மொத்தம் உள்ள ஆயிரத்து 91 வாக்காளர்களில் 81 பேர் ஓட்டு போட்டிருந்தனர். இருகூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 4 வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணியளவில் 10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் காலை 9 மணிக்கே மொத்தம் உள்ள ஆயிரத்து 210 வாக்குகளில் 250 ஓட்டுகள் அதாவது 20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாகராயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 10 மணிக்கு மொத்தம் உள்ள ஆயிரத்து 251 வாக்குகளில் 278 பேர் வாக்களித்து இருந்தனர். அவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். மதியம் 1 மணி வரை ஆண்களே அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இருந்தனர். அதன்பின்னர் பெண்கள் அதிக அளவில் வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
சூலூர் தொகுதியில் காலை 7 மணி முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 11 மணிக்கு பிறகு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. இதற்கு காரணம் கடுமையான வெயில் தான். மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மக்கள் ஓய்வாக வீட்டில் பொழுதை கழித்தனர். எனவே மதிய உணவுக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்ததையடுத்து மாலை நேரம் நெருங்கும்போது மீண்டும் ஓட்டுப்பதிவு சூடு பிடிக்க தொடங்கியது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான ஒட்டுப்பதிவு விவரங்களை உடனுக்குடன் செல்போன் மூலம் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகளுக்கு அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அதிகாரிகள் அனுப்பிக்கொண்டே இருந்தனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 324 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தன. 6 மணி ஆனதும் வாக்குச்சாவடி வளாகத்தில் நின்ற வாக்காளர்களுக்கு உடனடியாக டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குச்சாவடியின் பிரதான கேட் மூடப்பட்டது. அதன்பின்னர் டோக்கன் கொடுக்கப்பட்டவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். சூலூர் தொகுதியில் 79.41 சதவீதம் ஓட்டுப்பதிவானது.
வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்திற்கும் சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்டு ஓட்டு எண்ணும் மையமான கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரிக்கு (ஜி.சி.டி.) கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.