வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தர மறுப்பு, தந்தையை உயிரோடு கொளுத்திய வாலிபர் - சிவகாசியில் பரபரப்பு
வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் தர மறுத்த தந்தையை உயிரோடு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராமசாமி நாடார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 47). சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மகன் முத்துப்பாண்டி (19). இவர், சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருப்பதாகவும் அதற்கு பணம் தேவை என்றும் தந்தையிடம் கூறியுள்ளார்.
மகன் வெளிநாடு சென்று சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து விடுவான் என்று நம்பிய வேல்முருகன் மகன் கேட்டபடி ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் முத்துப்பாண்டி பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாடு செல்லவில்லை. மும்பைக்கு சென்று விட்டு அங்கு சில நாட்கள் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பியதாக தெரிகிறது. இதனால் மகன் மீது வேல்முருகன் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருப்பதாக தந்தையிடம் மீண்டும் முத்துப்பாண்டி பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்து போய் விட்டதாக கூறி பணம் கொடுக்க வேல்முருகன் மறுத்துள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி வீட்டில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கரவாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து தந்தையின் மீது கொட்டி தீவைத்துள்ளார். உடல் முழுக்க தீப்பற்றிய நிலையில் வேல்முருகன் அலறித்துடித்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்காய சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து முத்துப் பாண்டியை கைது செய்தார். தந்தையை உயிரோடு மகனே கொளுத்திய சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.