பாலமேடு அருகே, வடமாடு மஞ்சுவிரட்டு விழா
மதுரை பாலமேடு அருகே வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.;
அலங்காநல்லூர்,
மதுரை பாலமேடு அருகே கோணப்பட்டியில் பகவதி அம்மன், மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து 12 காளைகள் கலந்து கொண்டன. இதில் மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு ஒவ்வொரு காளைகளாக பங்கேற்றன. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களம் இறங்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. சீறிப் பாய்ந்த பல முரட்டுக் காளைகள் வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடவில்லை. இதில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பணமும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோணப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். முன்னதாக மாடு பிடித்ததில் வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர்.