செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியானார்கள். உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது அவர்களுக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரியஅகரத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26). செஞ்சி அருகே வடவனூரில் உள்ள இவரது உறவினர் ஒருவர் நேற்று இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, குமரேசன் தனது மோட்டார் சைக்கிளில் வடவனூருக்கு புறப்பட்டார்.
அவருடன் அவரது உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புத்தூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி நந்தினி(27), இவரது மகள் செந்தமிழ் செல்வி(1½), சென்னை அண்ணாநகரை சேர்ந்த குட்டி மகள் நித்யா(26) ஆகியோரும் அதே மோட்டார் சைக்கிளில் வடவனூருக்கு புறப்பட்டனர்.
இரவு 10.30 மணிக்கு செஞ்சி அருகே சேர்விளாகம் என்ற இடத்தில் வந்தபோது, திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
விபத்தில் பலியான நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.