ஜிப்மர் ஊழியர் வீட்டில் திருடிய சிறுவன் உள்பட 2பேர் கைது

ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் வீட்டில் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-18 23:00 GMT
மூலக்குளம், 

புதுவை மேட்டுப்பாளையம் வி.பி.சிங் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஜிப்மர் ஊழியர் கருணாநிதியின் வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு போனது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் வீட்டில் தச்சு வேலைக்காக வந்த தொழிலாளர்கள் சிலர் அங்கேயே தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தச்சு வேலையில் ஈடுபட்ட சண்முகாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விஜய் (24) மற்றும் சிறுவன் ஒருவன் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருட்டு போன நகைகளையும் அவர்களிடமிருந்து மீட்டனர்.

இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்