சென்னை பாடியில் போலீசுக்கு சொந்தமான ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மாவட்ட கலெக்டர் அதிரடி
சென்னை பாடியில் போலீசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பூந்தமல்லி,
சென்னை பாடியில் போலீஸ் குடியிருப்பு மற்றும் அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக 1976-ம் ஆண்டு தமிழக அரசு 14 சென்ட் நிலத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. ஆனால் சிலர், அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
இவ்வாறு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக போலீசாரின் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தவர்கள், அது தங்களுக்கு சொந்தமான நிலம் என்றுகூறி போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
கலெக்டரிடம் கோரிக்கை
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் சண்முகம் என்பவர் அந்த நிலம் போலீசுக்கு அரசால் ஒதுக்கப்பட்டது என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். அதன் பிறகுதான் பாடியில் போலீசாருக்கு சொந்தமான நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரும்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
ரூ.10 கோடி நிலம் மீட்பு
இது தொடர்பாக விசாரித்த மாவட்ட கலெக்டர், போலீசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் இருந்த போலீசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த நிலத்தை சுத்தம் செய்த, சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்த போலீசார், அந்த நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.