ஏ.டி.எம். மையங்கள் முன் நின்று உதவுவது போல நடித்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

ஏ.டி.எம். மையங்கள் முன்பு நின்று உதவுவது போல நடித்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-18 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சாணக்கியபட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 68). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி காவேரிப்பட்டணத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர், சந்திரசேகரனிடம் இருந்த ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.7,500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து சந்திரசேகரன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கிருஷ்ணகிரி மோட்டூர் காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் கடந்த 10-ந் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர் பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்து செந்தில் குமாருக்கு தெரியாமல் அவர் வைத்திருந்த ரூ.21,500-ஐ திருடிக் கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து செந்தில்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பணம் அபேஸ் செய்த நபரின் உருவம் தெரிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் முன்பு நின்று கொண்டிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவரது பெயர் நந்தகோபால் (37), வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கம்மாவாரம்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும், சந்திரசேகரன், செந்தில்குமார் ஆகியோரிடம் பணத்தை திருடியது அவர் தான் எனவும், ஏ.டி.எம். மையங்களின் முன்பு நின்று உதவி செய்வது போல நடித்து தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து நந்தகோபாலை போலீசார் கைது செய்தனர். இதே போல அவர் வேறு யாரிடமும் பணம் அபேஸ் செய்துள்ளாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்