சேலத்தில் வாகன சோதனை: வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல்
சேலத்தில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் வியாபாரியிடம் இருந்து ரூ.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதுதவிர, தர்மபுரி, தேனி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடக்கிறது. அதேசமயம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளின் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சேலம் வடக்கு தொகுதி பறக்கும் படை தாசில்தார் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை சேலம் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை எண்ணி பார்த்தபோது ரூ.49 லட்சம் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் வந்த செவ்வாய்பேட்டை தெய்வநாயகம் தெருவை சேர்ந்த வியாபாரி மகேந்திரகுமார் (வயது 40) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் செவ்வாய்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளதாகவும், இதுதவிர, சோப்பு மற்றும் டீ, காபித்தூள் வியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரத்திற்காக பணத்தை ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.
ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் மகேந்திரகுமாரிடம் இல்லாததால் ரூ.49 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேசமயம் அவர், சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்குவதற்காக அவர் சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர் அந்த பணம் சேலம் வடக்கு தொகுதி தேர்தல் அதிகாரியும், சேலம் உதவி கலெக்டருமான செழியனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்தில் வியாபாரியிடம் ரூ.49 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.