கும்பகோணத்தில், கமல்ஹாசன் உருவ பொம்மை எரிப்பு - இந்து மக்கள் கட்சியினர் 11 பேர் கைது

கும்பகோணத்தில் கமல்ஹாசன் உருவ பொம்மையை எரித்த இந்து மக்கள் கட்சியினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-05-17 22:30 GMT
கும்பகோணம்,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசினார். இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், இந்து ஆதரவு அமைப்புகள் உள்ளிட்ட பலர் கமல்ஹாசனின் கருத்தை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த கும்பகோணம் உதவி கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் பாலா தலைமையில் நேற்று காலை கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திரண்ட இந்து மக்கள் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்கள் கமல்ஹாசனின் உருவபொம்மையை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனே இந்து மக்கள் கட்சி பிரமுகர் பாலா உள்பட அக்கட்சியை சேர்ந்த 11 பேரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்