சிதம்பரத்தில் பரபரப்பு, ஓடும் காரில் திடீர் தீ - நடுவழியில் நிறுத்திவிட்டு டிரைவர் ஓட்டம்

சிதம்பரத்தில் ஓடும் காரில் திடீரென தீ பிடித்துக்கொண்டதால், அதன் டிரைவர் நடுவழியில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-17 23:00 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் என்.எல்.சி. நகர் தில்லைநாயகபுரத்தை சேர்ந்தவர் அருணன். இவருக்கு சொந்தமாக கார் உள்ளது. இந்த காரை அண்ணாமலை நகர் கொத்தங்குடி தோப்பை சேர்ந்த தனசேகரன் மகன் ராஜூ(வயது 36) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் காரை சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் பழுது பார்க்க விட்டு இருந்தார். அதில் வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று காலை அங்கிருந்து காரை, அருணனின் வீட்டுக்கு ராஜூ ஓட்டி வந்தார்.

அப்போது வண்டிகேட் அருகே வந்த போது, காரில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பொறிகள் எழுந்தது. தொடர்ந்து காரின் முன்பகுதியில் இருந்து கரும் புகையும் வெளிவர தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜூ, உடனடியாக காரை, நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.

தொடர்ந்து அந்த பகுதி மக்களின் உதவியுடன் காரில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதனிடையே தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கபாசியம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. தீப்பிடித்ததை பார்த்தவுடன், டிரைவர் காரை விட்டு இறங்கி ஓடியதால் அவர் உயிர் தப்பினார். இல்லையெனில் பெரிய அளவில் விபத்து நேர்ந்து இருக்கும். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்