நாட்டு வெடி வைத்து, காட்டு யானையை கொன்றவர் கைது - 2½ ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
நாட்டு வெடி வைத்து காட்டு யானையை கொன்ற வழக்கில் ஒருவர் 2½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
துடியலூர்,
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி காட்டு யானையை கொல்வதற்காக அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த குட்டி யானை ஒன்று அதை கடித்ததால் இறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த செங்கா என்கிற ராஜேந்திரன்(வயது 41) தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு ராஜேந்திரனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கோவை வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் தடாகம் பிரிவு வனவர் சாரம்மாள், வனக்காப்பாளர் ரங்கசாமி மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குட்டி யானையை கொன்ற வழக்கில் கடந்த 2½ ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். கைதான ராஜேந்திரன் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரையின்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனவிலங்குகளை இதுபோன்று வெடி வைத்து கொல்வது சட்டப்படி குற்றம். இனி இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடவேண்டாம். அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளனர்.